×

வன உயிரின வார விழாவையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

 

உடுமலை, அக்.4: வன உயிரின வார விழாவையொட்டி, ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் உடுமலை வனச்சரகம் திருமூர்த்தி மலையில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் தலைமையில் வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், சுற்றுலா பயணிகள் மத்தியில் கணேஷ்ராம் பேசியதாவது: திருமூர்த்தி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் பஞ்சலிங்க அருவியானது 2049 மீட்டர் உயரத்தில் உள்ள பிச்சிச்சி மலையில் உள்ள சோலைக்காடுகளிலிருந்து உற்பத்தியாகி பல கிளை ஓடைகள் சேர்ந்து பஞ்சலிங்க அருவியாக திருமூர்த்தி மலை வந்தடைந்து மக்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

மனித குலத்திற்கு தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்கின்ற சோலைக்காடுகளை காப்பாற்றுவது இன்றியமையாத கடமையாகும். மேலும், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் மூலம் வெளியேறும் கார்பன் போன்ற கரிம வாயுக்களை மரங்கள் தங்களின் இலைகளில் சேமித்து வைப்பதன் மூலம், ஓசோன் படலம் சேதமடையாமல் பாதுகாப்பதன் மூலம் மனிதர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் இதர நோய்களில் இருந்து காப்பாற்றுகிறது. இதுபோன்ற பல்வேறு பயன்கள் தரும் மரங்களை உருவாக்குவது வன உயிரினங்களே, எனவே வனம் மற்றும் வன உயிரினங்களை காப்பாற்றுவது நமது தலையாய கடமை ஆகும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில், உடுமலை வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post வன உயிரின வார விழாவையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Wildlife Week ,Udumalai ,Anaimalai Tiger Reserve ,Tirupur ,Vanakottam ,Vanacharagam ,
× RELATED அமராவதி வனச்சரகத்தில் இரை தேடி இடம் பெயரும் வனவிலங்குகள்